பல தடவை டிரை பண்ணுனேன்... பணம் வரல.. அதான்..! லாரி டிரைவரால் ஏடிஎம் எந்திரத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஆத்திரத்தில் வாடிக்கையாளர் கல்லைப் போட்டு உடைத்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஒரு தேசிய வங்கியின் ஏடிஎம் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. வங்கியின் அருகிலேயே ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. அப்போது அங்கு மேலும் 2 பேர் வருகின்றனர். அவர்களை பார்த்து எதுவுமே வேலை செய்யவில்லை பணம் வரவில்லை என்பது போல் ஏதோ கூறுகிறார்.

பின்னர் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு தன்னுடைய காலால் ஏடிஎம் இயந்திரத்தை எட்டி உதைக்கிறார். இதை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் பயந்து போய் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகின்றனர். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அந்த வாடிக்கையாளர் வெளியில் இருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரம் மீது வீசிவிட்டு செல்கிறார். இதனால் அந்த ஏடிஎம் இயந்திரம் சேதம் அடைகிறது. இவை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்தவர், சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிவந்தது. இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு போலீஸார் அவரை கைது செய்தனர்.