360 பெண்களை திருமணம் செய்த நித்ய கல்யாண பெருமாள்? ஆன்மிக அற்புதம்

தன்னை வழிபடுபவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்குபவர் நாராயணனாகிய மகாவிஷ்ணு. அப்படியான மகாவிஷ்ணுவிற்கு நமது நாட்டில் பல கோவில்கள் இருக்கின்றன.


ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதத்தில் சேவை சாதிக்கிறார் திருமால். அப்படி ஆண்டு முழுவதும் “கல்யாண” கோலத்தில் காட்சி தரும் கோயில் தான் “திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள்” கோயில். 108 திவ்ய தேசங்களில் ஒன்று இந்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யபட்ட புண்ணிய ஷேத்திரம்.

இக்கோவிலின் இறைவனான திருமால் நித்யகல்யாண பெருமாள், லட்சுமி வராக பெருமாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியாக கோமளவல்லி தாயார் இருக்கிறார். புன்னை மரம் இக்கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது. புராணங்களின் படி “குனி” என்ற முனிவரும், அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்கு திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளை திருமன்னம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்க லோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார் நாரதர்.

“காலவரிஷி” என்பவர் குனி முனிவரின் மகளை திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளை பெற்றார். அவர்கள் அனைவரையும் நாராயணனாகிய திருமாலுக்கே திருமணம் செய்விக்க விரும்பி நெடுங்காலமாக தவமிருந்தார் ஆனாலும் திருமாலின் காட்சி கிடைக்கவில்லை. ஒரு நாள் காலவரிஷி தங்கியிருந்த குடிலுக்கு ஒரு இளைஞர் வந்தார். தான் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருப்பதாக கூறி, காலவரிஷியிடம் சில உதவிகளை கேட்டான் அந்த இளைஞன்.

இளைஞனின் முகத்தில் இருந்த தெய்வீக தேஜஸை கண்ட ரிஷி, தனது 360 பெண்களையும் அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க தனது விருப்பத்தை தெரிவித்தார். இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் 360 நாட்களில் 360 பெண்களை திருமணம் செய்து கொண்டார். 360 ஆம் நாள் இறுதியில் இளைஞன் வடிவில் வந்த திருமால் தனது வராகமூர்த்தி அவதாரத்தில் காலவரிஷிக்கு காட்சி தந்தார். எப்போதும் திருமண கோலத்திலேயே இருந்ததால் இவருக்கு “நித்யகல்யாண பெருமாள்” என்ற பெயர் ஏற்பட்டது.

360 பெண்களையும் ஒரே பெண்ணாக மாற்றி தனது இடது புறத்தில் நிறுத்தி அனைவருக்கும் காட்சி தந்தார். திரு என்ற மகாலட்சுமி தேவியை தன் இடது பக்கத்தில் வைத்து சேவை சாதித்ததால் இந்த தளம் “திருவிடவெந்தை” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருவிடந்தை என்ற பெயர் ஏற்பட்டது. பெருமாளின் கன்னத்தில் இயற்கையாகவே ஒரு திருஷ்டிப்பொட்டு அமைந்திருக்கிறது. வராக மூர்த்தி தன் ஒரு திருவடியை பூமியின் மீது பதித்தும் மற்றொன்றை ஆதிசேஷன் மீது பதித்தும் அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயாரின் நாமமாகிய கோமளவல்லி என்ற பெயராலேயே இந்தத் தலம் கோவளம் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்,.

இந்த திருவிடந்தை பெருமாள் கோவிலில் மட்டும் தான் ஓர் ஆண்டில் 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் எப்போதும் கல்யாண கோலத்திலேயே இருப்பதால், திருமணம் காலதாமதம் ஆகிற ஆண்கள், பெண்கள் இக்கோவிலில் வந்து வழிபட்டு பூஜைகள், பரிகாரங்கள் மேற்கொண்டு பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்யப்படும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்து வழிபட வெகு சீக்கிரத்திலேயே திருமணம் கோலத்தை தன்னை வழிபடும் திருமணம் ஆகா இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு திருமண பிராப்தியை அளிக்கிறார் என்பது இங்கு வந்து வழிபட்டு அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காக இருக்கிறது.

மேலும் திருஷ்டி தோஷம், ராகு-கேது தோஷம், சுக்ர தோஷம் போன்றவை இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு நீங்குவதாக ஐதீகம். பலி எனும் அரக்க குல அரசன் தனது “பிரம்மஹத்தி” தோஷத்தை இத்தல பெருமாளை வழிபட்டு போக்கி கொண்டான். யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இத்தலத்தில் உள்ளது. இந்தியாவிலேயே கொச்சி அரண்மனையிலும், இத்தலத்திலும் மட்டுமே அவ்வகை பல்லக்குகள் உள்ளன.