கடைசி ஓவர் வரை திக் திக்! மிரட்டிய பிராத்வெய்ட்! அடக்கிய டிரன்ட் போல்ட்! ரசிகர்களுக்கு செம விருந்து!

கடைசி ஓவர் வரை திக் திக் என்கிற பரபரப்புடன் நடைபெற்ற போட்டியில் வென்று நியுசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் நியுசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. துவக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்து வீரர்களை மிரட்டினர். இதனால் நியுசிலாந்து வீரர்களால் ரன் சேர்க்க முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சீரான இடைவெளியில் நியுசிலாந்து விக்கெட்டுகள் இழந்து கொண்டிருந்தன. ஆனால் கேப்டன் வில்லியம்சன் மட்டும் நிதானமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் ரன்களை குவித்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து அணி 291 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 154 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார்.

பிறகு களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 170 ரன்களை கடப்பதற்குள் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் நியுசிலாந்து இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்லோஸ் பிராத்வெய்ட் களம் இறங்கிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது.

நியுசிலாந்து பந்து வீச்சை நாளாபுறமும் சிதறடித்து அவர் மளமளவென ரன்களை குவித்தார். பந்துகள் பவுண்டரிகளுக்கும் சிக்சர்களுக்கும் மாறி மாறி பறந்தன. ஆனால் டிரன்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி மற்ற வீரர்கள் ரன்களை குவிக்காமல் தடுத்து வந்தார்.

நீசம் வீசிய 49வது ஓவரின் கடைசி பந்தை பிராத்வெய்ட் சரியாக கணிக்கவில்லை. இதனால் அவர் தனது விக்கெட்டை பறிகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நிசம் மட்டும் அந்த பந்தை சரியாக வீசாமல் இருந்திருந்தால் நியுசிலாந்து தோல்வியை தழுவியிருக்கும்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வெய்ட் 82 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்தார். இருந்தாலும் அவரால் அந்த அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. கடைசி ஓவர் வரை திக் திக் என சென்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.