மோசமான பேட்டிங்! இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி! தொடரை வென்று மாஸ் காட்டிய நியூசிலாந்து அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.


முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 235 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.