திருமணமாகி 15 நாட்கள்! செல்பி மோகம்! கணவன் கண் முன்னே புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

செல்ஃபி எடுக்க முயற்சித்து 4 பேர் பாம்பாறில் மூழ்கி உயிரிழந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள ஓட்டப்பட்டியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிதா என்ற 19 வயது மகளும், சினேகா என்ற 18 வயது மகளும், சந்தோஷ் என்ற 14 வயது மகனும் உள்ளனர்.

இவருடைய 2 மகள்களும் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் சந்தோஷ் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இளங்கோவனின் அக்காள் மகளான நிவேதாவுக்கும், பர்கூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் 15 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரபு, நிவேதா, கனிதா, ஸ்வேதா, யுவராணி, சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றனர்.

படம் பார்த்து முடித்த உடன் பாம்பாறின் வழியே வந்து கொண்டிருந்தனர். அப்போது பாம்பாறில் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். சந்தோஷ் தண்ணீர் ஒட்டியவாறு கரையில் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்க, பிரபு, நிவேதா, கனிதா, ஸ்வேதா, யுவராணி ஆகியோர் தண்ணீருக்குள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்கள் தவறி விழுந்தனர்.  தண்ணீருக்குள் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து உதவிக்காக பிரபு கூச்சலிட்டார். பின்னர் யுவராணியை காப்பாற்றி 2 பேரும் கரை ஒதுங்கினர். ஆனால் மீதமிருந்த 4 பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். 

உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்பாருக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 4 பேரின் உடலையும் மீட்டெடுத்து கரையில் போட்டனர். அவர்களுடைய உடல்களை பார்த்து பிரபுவும், யுவராணியும் கதறி அழுதனர். பின்னர் 4 பேரின் உடலையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கோட்டப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.