சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ்! அது எப்படி பரவும்? அதன் அறிகுறிகள் என்ன?

சீனாவில் புதிதாக பரவிவரும்  வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான முறை குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 24,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 5,30,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனிடையே சீனாவில் இந்த வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், தற்போது அந்நாட்டில், ஹண்டா என்ற புதுரக வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வைரஸால் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஹண்டா வைரஸ் என்பது ஒருவகையான வைரஸ் குடும்பமே. இவை எலிகளால் பரவக்கூடியவை. மேலும், நுரையீரல் நோய்க்குறி அல்லது சிறுநீரக நோய்க்குறி ஆகிய இரண்டு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள எலியின் சிறுநீர், மலம், எச்சில் ஆகியவற்றை மிதித்தால் மட்டுமே இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், மிகவும் அரிதான சம்பவங்களில் பாதிக்கப்பட்டு எலிகள் கடித்தால் கூட இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நோய் ஆராய்ச்சி மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

நுரையீரல் நோய்க்குறி(HPS) என்றும் சிறுநீரக நோய்க்குறியுடன் கூடிய ரத்தக்கசிவு (HFRS) என்றும் அழைக்கப்படுகிறது. இவை ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவக்கூடிய தன்மை படைத்ததல்ல. மிகவும் அரிதான நேரங்களில் பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும், இருமும் போதும் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த நோயைத் தடுப்பதற்கு என்று எந்த ஒரு தடுப்பூசி அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவமனையில் சேர்த்தால், நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று கூறப்படுகிறது. 

இவ்விரு நோய்களும் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வகையான ஆராய்ச்சிகளும், பரிசோதனை முறைகளும் உள்ளன. இவ்விரு நோய் அறிகுறிகளாக, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வறட்டு இருமல் ஆகியன உள்ளன. மேலும் ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்யாவிடில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் அதிக ரத்த கசிவு ஆகியவற்றினால் நோயாளிகள் சிரமப்பட இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாப்பிடும் பொருட்களையும், வசிக்கும் இடங்களையும் எலிகளிடம் இருந்து அப்புறப்படுத்தினாலே இந்த வைரஸிலிருந்து தப்பித்துவிடலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.