விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது இன்று சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம்! அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

இதுகுறித்து சட்டப் பேரவையில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற பாடல் வரிகளுக்கேற்ப மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகளையும், தொழில் நுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும், பிற உயர்கல்வி நிறுவனங்களையும் துவக்கினார்கள்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், பல உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவு நனவானது. இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 விழுக்காடு என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்களின் கோரிக்கை மற்றும் விழுப்புரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.