தீபாவளிக்கு களமிறங்கும் புது ரக பட்டாசுகள் ஒருபார்வை!

தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசு தான்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி. தீபாவளி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசு தான். நம்முடைய அனைவரது மனதிலும் மகிழ்ச்சி ஏற்படும் இந்த பட்டாசு , சுற்றுச்சூழலுக்கு மட்டும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சு இரசாயனப் பொருட்களை கொண்டதாகும். பட்டாசு வெடித்த பின்பு அதிலிருந்து வெளியேற்றப்படும் ஒலி மற்றும் புகை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வெடிக்கும் பட்டாசில் இருந்து வெளியேற்றப்படும் இந்த புகை நம்முடைய வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் சென்று மாசு ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காகவும் குறைப்பதற்காகவும் நம்முடைய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த முயற்சியின் வெற்றி தான் தற்போது களமிறங்கியுள்ள பசுமை பட்டாசுகள். பொதுவாகவே சாதாரணமாக நாம் வெடிக்கும் பட்டாசுகளில் மாசு ஏற்படுத்தும் பேரியம் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்வர். இது நம்முடைய சுற்றுச்சூழலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். ஆகையால் இந்த கேடுவிளைவிக்கும் ரசாயனத்தை பயன்படுத்தக்கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தடைவிதித்தது. 

இதனையடுத்து பட்டாசு தொழிற்சாலை நடத்தும் தொழிலதிபர்கள் பசுமை பட்டாசுகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள் , பேரியம் நைட்ரேட் அளவைக் குறைத்து, ஜியோ லேட் உள்ளிட்ட சில ரசாயனக் கலவைகளை அதிகமாக சேர்த்து உருவாக்கப்படும் பட்டாசு தான் பசுமை பட்டாசு என்று பதிலளித்தனர். பசுமை பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் இந்த ரசாயன பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பட்டாசு தொழிற்சாலை ஆட்கள் மிக உற்சாகமாக பட்டாசுகளை பார்த்து வருகின்றனர். தற்போது பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணி சிவகாசியில் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கும் பசுமை பட்டாசு வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.