3 மாத EMI விலக்கில் நூதன மோசடி..! OTPஐ கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகள்! உஷாரய்யா உஷாரு..!

சென்னை: 3 மாத இஎம்ஐ விலக்கு சலுகையை பயன்படுத்தி சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக, வங்கிகள் எச்சரித்துள்ளன.


சென்னை: 3 மாத இஎம்ஐ விலக்கு சலுகையை பயன்படுத்தி சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக, வங்கிகள் எச்சரித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த லாக் டவுன் நீடிப்பதால், பலரும் அன்றாட வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கணினி சார்ந்த வேலை செய்வோர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்தாலும், மற்றவர்கள் வேலையின்றி, வருமானமும் இன்றி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், இந்த இழப்பை சமாளிக்கும் வகையில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்துவோர், பணம் இல்லாத சூழலில், 3 மாதங்களுக்கு அதனை தள்ளி வைத்து, பின்னர் நிலைமை சரியானதும் திரும்ப செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையேற்று, வங்கிகளும், பல்வேறு கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு 3 மாத கால இஎம்ஐ விலக்கு அளித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிலர் வங்கி வாடிக்கையாளர்களை மோசடி செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வங்கியில் இருந்து பேசுவது போல வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் செய்து பேசும் இந்த மோசடி கும்பல், உங்களுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளது, அதனைச் சொல்லுங்கள், என்று கேட்கிறார்களாம். அதனை நாம் சொன்னதும், நமது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் அபேஸ் செய்துவிடுகிறார்களாம். இந்த மோசடியை கண்டுபிடித்துள்ள எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகள், இதுபற்றி தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்துள்ளன.

இதுபற்றி அந்த வங்கிகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், ''விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு கடன் தவணை செலுத்துவதில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளித்து வருகிறோம். விருப்பமில்லாதவர்கள் எப்போதும் போல இஎம்ஐ செலுத்தலாம். இதுதொடர்பாக, எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இமெயில் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுக்கலாம். மற்றபடி நாங்கள் யாருக்கும் ஓடிபி எண் எதுவும் தருவதில்லை.

ஆனால், நாங்கள் ஓடிபி தருவதாகச் சொல்லி சிலர் வாடிக்கையாளர்களை மோசடி செய்து வருகின்றனர். அப்படி யாரும் ஓடிபி கேட்டாலோ, உங்களது வங்கி பரிவர்த்தனை விவரங்களை கேட்டாலோ கொடுக்காதீர்கள்,'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழக போலீசாரும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். வங்கி பிரதிநிதிகள் என யாராவது உங்களை போனில் தொடர்புகொண்டால், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி, போலீசார் எச்சரித்துள்ளனர்.