புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது.! வியனரசு கடுமையான ஆவேசம்.!

மத்திய அரசு திடுமென கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது என்று தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவர் அ.வியனரசு, கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.


எந்தவொரு அமைப்பு , இயக்கம் அல்லது கட்சிசிகளின் மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு சிறப்பானதாக , முற்போக்கானதாக இருந்தாலும் அதைப்பொருட் படுத்துவதில்லை என்ற திட்டத்தோடுதான் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இதுதான் வெளிப்பட்டிருக்கிறது.

“புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே திங்களில் "கஸ்தூரிரெங்கன் குழு"வின் 484 பக்க அறிக்கையை பா.ஜ.கவின் நடுவணரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், பல அரசியல் கட்சிகள், பெற்றோர் கழகங்கள்,கல்விக்கான பொதுநல பொதுநல அமைப்புகள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை தந்திருந்தனர். 

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019 இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டன. 

இவை எதையுமே பொருட்படுத்தாமல் அதற்கான காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் தலைகீழாக வடிவமைத்து, 29.07.2020 அன்று இந்திய அமைச்சரவை “புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் முடிவெடுத்துஅறிவிப்பு செய்தது. 

தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த வகையிலான மாற்றுக் கருத்துக்கான கருத்தாடலும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ஜ.க. அரசின் எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் பொருட்படுத்த தேவை இல்லை என்ற சர்வாதிகார இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் போக்கையே காட்டுகிறது. 

இந்துத்துவ – சமசுகிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரும் முதலாளிகளுக்குத் தேவையான கையாட்களை உருவாக்குவதும், கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவதுமே நோக்கமாகக் கொண்டு, இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற இந்த போக்கு கொறைந்தபட்சமாக இருக்கும் மாநிலங்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் வஞ்சகச் செயலன்றி வேறெதுமில்லை. இதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்குக் கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூழ்ச்சித்திட்டம் இக்கல்விக் கொள்கையின் திடீரறிவிப்பு மூலம் மாநில அரசுகளை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கிறது.

சமசுகிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் சுரண்டல் வேட்டைக்கும் கல்வி வணிகத்திற்கும் வழிவகுப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” நுழைவுத் தேர்வு இருப்பதுபோல்,

கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வைக் கொண்டுவந்து அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவையும் சுரண்டலையும் உறுதி செய்யும் நோக்கில் “தேசியத் தேர்வு ஆணையம்” உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் தட்டிப் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை முழுவதும் நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற இந்திப் பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான இந்துத்துவக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டு உள்ளதையே இது காட்டுகிறது.

கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “புதிய தேசியக் கல்விக் கொள்கை" மூலம் நிறைவேற்றப்படும் பேரபாயம் சூழ்ந்து வருவதை மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.