ஒரே போனில் ட்ரூ காலர் - மொபைல் பேங்கிங் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை படிங்க முதல்ல!

செல்போன் கால்களை கண்டுபிடிக்க உதவும் பிரபல செல்போன் செயலியில் பக் இருப்பது அறியப்பட்டுள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செல்போன்களில் வரும் அறியாத நம்பர்களை கண்டுபிடிப்பதற்கு ட்ரூகாலர் எனும் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரூகாலரில் நம்மால் நமக்குத் தேவைப்படாதவர்களின் செல்போன் எண்களை பிளாக் செய்ய இயலும். இந்த செயலியின் புது அப்டேட்டில் பக் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரூகாலர் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு முறையான அறிவிப்பின்றி ஐசிஐசிஐ வங்கியில் யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் வெளியாகியுள்ளன. ட்ரூகாலர் வெர்ஷன் 10.41.6 என்பதில் இந்த பிரச்சினை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வெறுப்படைந்து உள்ள பயனர்கள் இந்த செயலியை அன்இன்ஸ்டால் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக ட்ரூகாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரமத்திற்கு வருந்துகிறோம். அடுத்து வெளியாகும் வெர்ஷனில் இந்த தவறு சரி செய்யப்பட்டு விடும்" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. ட்ரூகாலர் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் இந்த பிரச்சனையினால் கலக்கம் அடைந்துள்ளனர்.