கேரளப் பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் திருக்காட்கரை கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
நேந்திரம் வாழைக்குப் பின்னே இப்படியொரு சம்பவமா? படித்துப்பாருங்கள், அசந்தே போவீங்க!
அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில் வாழை மரங்கள் பயிரிட்டு இருந்தார். ஆனால் அவை வளர்ந்தும் எந்த பலனும் தராமல் அழிந்து போனது. இவ்வாறு பல முறை நிகழ்ந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.
பின்னர் அந்த பக்தர், தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக் குலை ஒன்றை திருக்காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்து தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார். உயர்ந்து வளர்ந்திருந்த வாழை மரங்களில் குலைகள் காய்த்துத் தள்ளியது.
பெருமாளின் நேத்திரங்களின் (கண்களின்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்றில் இருந்து ‘நேத்திரம் வாழை’ என பெயர் வந்து, அது நேந்திரம் என மருவி வழங்கப்படலாயிற்று. பெருமாளை ‘நேர்ந்து’ கொண்டு இந்த வாழைப் பழங்கள் உருவானதால் ‘நேந்திரம்’ வாழை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூற்று நிலவுகிறது.
இதனால் திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழை குலை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகை நாளன்று வெகு அதிகாலையிலேயே நேந்திரம் கொலைகளை தோளில் சுமந்து நீண்ட வரிசையில் நின்று சமர்ப்பிப்பார்கள். அந்தக் குலைகள் ஆலய முன் விதான்ங்களில் கட்டித் தொங்க விடப் படுகின்றன.
இவ்வாறு அந்த பக்தர் சமர்ப்பிக்கப்பட்ட பொன் வாழைக்குலைகளில் ஒன்றைக் காணாத இப்பிரதேச மன்னன் ஒருவன், ஆலயத்திற்கு தினந்தோறும் வந்து காட்கரை அப்பனை வழிபடும் யோகி ஒருவரின் மீது சந்தேகப்பட்டு திருட்டு குற்றம் சுமத்தி யோகிக்கு தண்டனை வழங்கினான்.
அதன் பின் அந்தக் பொன் வாழைக்குலை காட்கரை அப்பனின் திருச்சந்நிதிலேயே கண்டெடுக்கப்பட்டது. தன்னை சந்தேகப் பட்டதற்காக மனம் வருந்திய யோகி சபித்து விட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள யோகி, பிரம்ம ராட்சஸனாகி இத்தலத்தில் திரிந்து கொண்டிருந்தாராம்.
பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீர வேண்டி யோகியை வழிபட்டு இத்தலத்தில் இவருக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து அவரது ஆத்மா சாந்தியடையச் செய்தனராம். இன்றளவும் திருக்காட்கரை இறைவனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள் இந்த யோகியின் சன்னிதிக்கு சென்று விட்டு செல்கின்றனர்.