நீட் ஆள்மாறாட்ட வழக்கு! வசமாக சிக்கிய திமுக எம்பி கல்லூரி! பதற்றத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒருவர் எஸ்ஆர்எம் கல்லூரியில் பயின்று வருபவர் என்று தெரியவந்துள்ளதால் அந்த கல்லூரியின் உரிமையாளரும் திமுக எம்பியுமான பாரிவேந்தருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தற்போது தமிக அரசியல் அரங்கில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்ட போது அந்த மாணவரோடு இது முடிந்துவிடும் என்று தான் அனைவரும் நினைத்தனர். காரணம் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கேடசன் ஸ்டான்லி மருத்துவமனையில் உயர் பொறுப்பில் உள்ளவர்.

எனவே அவர் தனது தொடர்புகள் மூலமாக ஆள்மாறாட்டத்தை எளிமையாக்கியிருப்பார் வேறு யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் விசாரித்த போது தான் நீட் ஆள்மாறாட்டத்திற்கு தரகராக ஒருவர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

தரகராக செயல்பட்ட நபர் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவக் கல்லூரி ஒன்றின் முக்கிய புள்ளி என்கிறார்கள். இந்த விஷயமே கேரளா சென்று விசாரணை நடத்திய பிறகு தான் போலீசுக்கு தெரியவந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஜோசப் என்பவர் நீட் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார்.

அந்த பயிற்சி மையத்துடன் தரகர் நெருங்கிய தொடர்பில் இருந்து ஆள்மாறாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. ஒரு மாணவரிடம் தலா 20 லட்சம் ரூபாய் என்று ரேட் பேசி ஆள்மாறாட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கேரளாவில் ஜோசப் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் பயின்று வந்த மாணவர் பிரவீணை தூக்கியுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.

பிரவீணுடன் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் 2 முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் இதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் அவனுக்கு இடம் கிடைப்பதில் கூட சிக்கல் இருந்ததாகவும் சரவணன் கூறியுள்ளார். அப்போது தான் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் இருந்து பேசுவதாக நபர் ஒருவர் தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார் சரவணன்.

அவர் கொடுத்த யோசனையின் படியே நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பிறகு தனது மகன் பெயரில் அந்த நபரே போலியாக ஆவணங்களை தயார் செய்து அட்மிசன் போட்டுக் கொடுத்துவிட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார் சரவணன்.

இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் மாணவர் பிரவீண் மற்றும் அவரது தந்தை ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர் பிரவீண் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்ததை ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளனர்.


இந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி தான் திமுக எம்பி பாரிவேந்தருக்கு சொந்தமானது. இதனை அடுத்த இந்த விவகாரத்தில் கல்லூரியின் முக்கிய நிர்வாகிகளை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும் தரகராக செயல்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி தொடர்புடைய நபரை கைது செய்யவும் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.

ஏற்கனவே திமுக எம்பி பாரிவேந்தருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கல்லூரி இப்படி ஒரு மோசடி புகாரில் சிக்கியுள்ளதால் அவருக்கு தொந்தரவு அதிகரிக்கும் என்கிறார்கள்.