கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் நெமிலி பாலா! வீடு தேடி வரும் தெய்வம் இவள்!

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி அதேபோன்று நெமிலி பாலா


வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி என்ற அழகான ஊரிலே கடந்த 150 ஆண்டுகளாக அருள் மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா. அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கலசங்களையும்,

ஆயுதங்களையும் பெற்று ரதம் ஏறி போருக்கு புறப்பட்டாள். போரில் பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். இதன்பின் பாலா, அன்னை லலிதாவோடு ஐக்கியமானாள் என்கிறது புராணம். அதன்பின் இந்தக் கலியுகத்தில் மீண்டும் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினாள் பாலா. 

இந்த அன்னை நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரசியமானது. சிவம் பெருக்கும் சீலர் நெமிலி டி.கே.பாலசுப்பிரமணியன் என்பவர் கனவிலே 10 வயது பெண் ஒருவள் பச்சை பாவாடை உடுத்தி கொண்டு நான் தான் பாலா, உன் வீட்டுக்கு விக்ரகமாக வருவேன், உன் இல்லத்துக்கு அருகே உள்ள குசஸ்தலை ஆற்றில் என்னைத் தேடுக என்று அருள்வாக்கு தந்தாள். இரண்டு நாள் ஆற்றிலே தேடியபோது கிடைக்காமல் அடம்பிடித்த பாலா மூன்றாவது நாள் தேடிய போதுதான் தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டு விக்ரகமாக சுண்டு விரல் உயரத்திலே அந்த சுந்தரி அவருக்கு கிடைத்தாள்.  

கடந்த நான்கு தலைமுறைகளாக அந்த பக்தரின் வீட்டுக்கூடத்தையே தனது மண்டபமாக்கி அருளாட்சி புரிந்து வருகிறாள். திருமண வரம் குழந்தை பேறு கல்வியில் சிறப்பு என வந்தவர்க்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறாள். நெமிலி பாலாவின் உற்சவ விக்ரகம் கொள்ளை அழகு. கைகளில் ஜபமாலையும், புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளைக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீபாலாவே சகல வித்தைகளுக்கும் பிறப்பிடம். 

உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான். சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள். சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள். அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னை பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கும் இடம் பாலாபீடம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 

நெமிலி பாலா இசையினில் வசிப்பவள். கடந்த பல வருடங்களாக நவராத்திரி விழாவில் முதல் நாள் இன்னிசை வழங்கி வந்த டாக்டர் சீர்காழி கோவிந்தராஜனை தொடர்ந்து தற்போது அவரது மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் முதல் நாள் நவராத்திரி இசை வழங்கி வருகிறார்.  இந்த ஆண்டு 29.9 2019 அன்று அன்னை பாலா பீடத்தில் நவராத்திரி விழா தொடங்க இருக்கிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இசை வழங்கி சேவை செய்து வந்தார். பின்னணிப் பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், சித்ரா, எஸ்.ஜானகி, நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரும், பின்னணிப் பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம், கே வீரமணி, மலேசியா வாசுதேவன், பி.பீ.ஸ்ரீனிவாஸ், மதுதேவா போன்ற பலரும் அன்னையிடம் பாடி அருளைப் பெற்றவர்கள்.  

அன்னை பாலாவிற்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதுதவிர ஆடி வெள்ளி திருவிழா, சித்திரை திருவிழா ஐப்பசி பூரத்தன்று பிறந்த நாள் விழா, புத்தாண்டு விழா என பாலா பீடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். காலை 9 மணிக்கு ஆலயம் திறந்திருக்கும். அப்போது பாலா திரிபுரசுந்தரியைத் தரிசிக்க முடியும். பாலா பீடம் ஒரு சித்தர்பீடம். ஆம் கருவூர் சித்தருக்குக் காட்சி தந்த அருட்பீடம்.  

ஸ்ரீ பாலாவின் மூல மந்திரம் - :ஓம் ஐம் க்லீம் சௌம்  ஐம் ----என்ற பீஜம் வாக் பீஜம் எனப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி இவர்களின் அம்சம். இம்மந்திரம் நல்ல பேச்சாற்றல், ஞானம், அறிவு தரும். 

க்லீம்  ----என்ற பீஜம் காமராஜ  பீஜம் எனப்படும் .இதில் விஷ்ணு ,லக்ஷ்மி ,காளி ,மன்மதன்  இவர்கள் அடக்கம் . இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கெளரவம் ,வசீகரசக்தி, உடல், மனபலம் இவற்றை தரும். 

செளஹீம்  ------இப்பீஜத்தில் சிவன், பார்வதி, முருகன்அடக்கம். செளம் என்ற பீஜத்தில் இருந்தே செளபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது .இப்பீஜம் செளபாக்கியம் நிறைந்த வளங்களை தரும். 

தியான ஸ்லோகம்:  

அருண கிருண ஜாலா 

ரஞ்ஜிதா சாவகாசா 

வித்ருத ஜப படீகா 

புஸ்தகா பீதி ஹஸ்தா 

இதரகர வராட்யா 

புஹ்ல கஹ்லார சமஸ்தா 

நிவஸது ஹ்ருதி பாலா 

நித்ய கல்யாண சீலா 

இந்த தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.