ஊர்விட்டு ஊர் செல்லும் சரஸ்வதி தேவி! - புதுமையான நவராத்திரி கொண்டாட்டம்!

குமரிமாவட்டத்தின் பெருமைகளுள் ஒன்றான பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்துக்குள் உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் இருக்கிறது.


சரஸ்வதியம்மனின் சிலை, ராமாயணத்தைப் படைத்த கம்பனால் சேர மன்னனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது. நவராத்திரி தோறும் சரஸ்வதி அம்மனுக்கு கோலாகலமாக வழிபாடு நடக்குமென்று அந்த மன்னன் அளித்த வாக்குறுதி, தலைமுறை தலைமுறையாக இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

1834-ம் ஆண்டிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதற்கான ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. அன்றைய திருவிதாங்கூர் அரசால், பத்மநாபபுரம் அரண்மனை தேவராக்கெட்டில் ஒரு சிறுகோயில் எழுப்பப்பட்டு சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது. பின்னர் நவராத்திரி பூஜை நாட்களில் திருவிதாங்கூர் மன்னர்கள் இந்த அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சி காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டது. இந்நிலையில் 1840-ம் ஆண்டு முதல் நவராத்திரி விழாவுக்கு சரஸ்வதியம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்வது வழக்கமானது. ஆண்டுதோறும் விஜயதசமியன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் சாதிமத பேதமின்றி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் கல்வி தொடங்கும் நிகழ்ச்சியைச் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

இக்கோயிலின் முக்கியத்துவம் இங்குள்ள மூல விக்கிரகமான சரஸ்வதியம்மன் பிரதிஷ்டை செய்யப்படாமல் சகட விக்கிரகமாகவே திகழ்வதுதான். இந்த அம்மன் விக்கிரகம் நவராத்திரிக்கு திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படும்போது சாளக்கிராமம் வைத்து இங்கு பூஜை நடத்தப்படும். இவ்வாறு அம்மன் நிலையாக பிரதிஷ்டை செய்யப்படாமல் இருப்பதால் சகட விக்கிரகம் எனப்படுகிறது.

அம்மன் சகட விக்கிரகம் ஆனதால், கும்பாபிஷேகத்துக்கு பதில் கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குப்பின் அண்மையில் கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகமானது மூலக்கடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களிலேயே நடத்தப்படுவது வழக்கம். கலசாபிஷேகம் தேவஸம் போர்டு, கேரள அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கோயில் விழாக்குழு ஆகியவற்றின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.

கருவறையில் அம்மன் வீற்றிருக்கும் பீடத்தின் இருபுறமும் நரசிம்மமூர்த்தி, வேதவியாசர் விக்கிரகங்கள் உள்ளன. கருவறையின் வெளியே உட்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் உபமூர்த்தியாக மூன்று சிவலிங்கங்கள் முறையே கேரளாவிலுள்ள வைக்கம், ஏற்றுமானுர், கடுதுருத்தி ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் விநாயகர், நாகரும் பரிவாரத் தெய்வங்களாக உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த காலத்தில் 1726- ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த பாரம்பரிய நவராத்திரி விழா குமரி கேரளா நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் விதமாக ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு குமரி மாவட்டம் சுசிந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகமும், வேளி குமாரகோவில் முருகன் விக்ரகமும்,

பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்ரகமும் பல்லாக்கில் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுப்பர்.

இந்த வருடம் இந்த சாமி விக்ரகங்கள் செப்டெம்பர் 28-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைந்தது. இதில் சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் கோட்டைக்கம், நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது..

பின்னர் சாமி விக்ரகங்கள் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்று பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து அக்டோபர் 10-ம் தேதி புறப்பட்டு 12-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.