வசூல் வாரிக்குவிக்கும் தேசிய ஜி.எஸ்.டி. ஆணையம். இது நல்லதுக்குத்தானா?

தொடர்ந்து நான்கு மாதங்களாக 1 லட்சம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக பெருமிதம் கொள்கிறது தேசிய ஜிஎஸ்டி ஆணையம்.


கடந்த ஜீலை 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு. நாட்டின் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதற்கடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்திற்கு போய்விட்டது.

மேலும் கடந்த 2014ம் ஆண்டு 8 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தற்போது 4.7 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2 சதவிகிதத்திற்கும் கீழே போய். இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.

கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான நான்கு மாதங்கள் தொடர்ந்து 1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது தேசிய ஜிஎஸ்டி கவுன்சில் ஆணையம்.

அதன்படி. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 1.05 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டின் பிப்ரவரி மாத வருவாயை விட இது 8% அதிகம் என்று கூறப்படுகிறது.  

2020 பிப்ரவரி மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,05,366 கோடி எனவும், இதில் சிஜிஎஸ்டி ரூ.20,569 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.27,348 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.48,503 கோடி மற்றும் செஸ் வரி 8,947 கோடி என்று விளக்கம் கொடுத்துள்ளது நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டிசம்பர் காலாண்டு ஜிடிபி விகிதத்தினை ஒப்பிட்டு பேசிய அமைச்சர் நிர்மலா. உள்நாட்டு வளர்ச்சி விகிதம் எழுச்சியடைய இது ஒரு நல்ல அறிகுறி எனவும், சவுதி அரேபியா போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். 

இந்நிலையில் கொரோனா தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 5 லட்சம் கோடி அளவிற்கு மூலதன இழப்பு ஏற்பட்டு தேசிய வர்த்தகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணியன் கலியமூர்த்தி