வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது! மத்திய வேளாண் அமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு புதுடெல்லியில் நேற்று (பிப்.24) நடந்த அவுட்லுக் வேளாண் மாநாட்டில் ‘சிறந்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்கள் இந்நிறுவனத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளுக்கு இவ்விருதினை வழங்கி கவுரவித்தார்.


வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது 2013-ம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஈஷா அறக்கட்டளையின் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பான ஈஷா அவுட்ரீச்சின் வழங்காட்டுதலில் செயல்பட்டு வருகிறது. தமிழக அளவில் முதல் இடத்தில் இருக்கும் இந்நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சிறு மற்றும் குறு விவசாயிகள், 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தேங்காய், பாக்கு, மஞ்சள், காய்கறி, வாழை போன்றவற்றை உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தொண்டாமுத்தூர் விவசாயிகளின் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் நன்கு மேம்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் கடந்த நிதியாண்டில் (2018-19) சுமார் 12 கோடி ஆண்டு வருமானம் (Annual Turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.