குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஜாமியா மாணவர்கள் விடிய விடிய போராட்டம்..! கவலை கொள்ளும் பாரதப்பிரதமர்..!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து விடிய விடிய போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை நினைத்து மிகுந்த கவலை கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


மக்களவையில் கடந்த 9ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது . இந்த மசோதாவை எதிர்த்து வடமாநிலங்களில் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்றைய தினம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் துவங்கிய போராட்டம் விடிய விடிய நடைபெற்றது . அவர்கள் செய்த போராட்டம் வன்முறையாக மாறியதால் டெல்லி காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப்பற்றி பல்கலைகழக நிர்வாகிகளுடன் கேட்டபோது அவர்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மாணவர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதேபோல் காவல்துறை அதிகாரிகளும் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்காமல் மாணவர்களை தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது தீவிரமடைந்துள்ளது. மேலும் பல்கலைக்கழக அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் துரதிர்ஷ்டமானவை என்றும் அவை கவலை அளிப்பதாகவும் கூறினார். எப்போதுமே கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் ஜனநாயகத்தின் அங்கங்கள் ஆகும். எந்த ஒரு போராட்டமும் சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்க கூடாது. பொது சொத்துக்களை சேதப்படுத்துவது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது நம்முடைய கலாச்சாரம் இல்லை எனவும் பிரதமர் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் இந்த குடியுரிமை மசோதா யாருக்கும் எந்த ஒரு பாதிப்பையும் அளிக்காது. ஆகையால் அனைவரும் அச்சப்படாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்வதாக பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது.