மோட்சம் தரும் நாராயணீயம்! ஆயுளும் ஆரோக்கியமும் அள்ளித்தரும் குருவாயூரப்பன் மகிமை!

நாராயணீயம் என்பது ஸ்ரீ குருவாயூரப்பனின் ஞானப் பொக்கிஷம்.


அது ஸ்ரீ குருவாயூரப்பனையே ஸ்ரீமத் பாகவதத்தின் பரம புருஷரான ஸ்ரீ மஹா விஷ்ணுவைக் கருதி செய்திருப்பதால் இதனையே ஒரு மஹாத்மீயம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதனை படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அவர்கள் ஒவ்வொருவரது இதயத்திலும் ஒரு குருவாயூர் தோன்றிவிடச் செய்கிறது. 

குருவாயூருக்கு வந்து குருவாயூரப்பனை போற்றும் போதெல்லாம் ஸ்ரீ நாராயணீயத்தையும் போற்றி வருகிறார்கள். இந்த அருமையான ஸ்ரீநாராயணீயம் என்ற இலக்கியம் மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி அவர்களால் 16 ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. அவர் தனது பக்தியினால் சிலை உருவமாக நின்ற ஸ்ரீகுருவாயூரப்பனை தலையை அசைக்கவும், பேசும்படியாகவும் செய்த மிகச்சிறந்த ஸ்தோத்திரங்களே ஸ்ரீ நாராயணீயம் ஆகும்.  

பட்டத்திரி அவர்களுடைய குருநாதருக்கு முடக்கு வாதப்பிடிப்பு நோய் வந்து விட்டது. பட்டத்திரி அவளுக்குத் தர வேண்டிய குருதஷிணைக்குப் பதிலாக அவருடைய நோயை தாமே ஆவாஹன முறையில் வாங்கிக் கொண்டு விட்டார். இதன் விளைவாக அவருடைய குருநாதரின் நோய் குணமாகியது. ஆனால் சிஷ்யரான அவருக்கு அந்த நோய் தொற்றிக் கொண்டுவிட்டது. அவர் நோய்வாய்ப்பட்டார். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகும் அவரைப் பற்றிய நோய் குணமடையவில்லை. கடைசியாக அவர் நீலமேக வண்ணனான அந்த குருவாயூர் கண்ணனை சரண் அடைந்தார். 

அங்கு அவர் குருவாயூரப்பனைப் போற்றும் வகையில் ஓராயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்லோகங்களை இயற்றினார். அந்த ஸ்லோகங்களையெல்லாம் நூறு தசகங்களாகப் பிரித்து ஸ்ரீமத் பாகவதத்தின் சாரங்கள் முழுவதையும் கொடுத்திருக்கிறார். அவை பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதார லீலைகளை எல்லாம் சிறப்பாகப் புகழ்வதாகும். ஒவ்வொரு தசகத்தின் முடிவிலும் ஒரு ஸ்லோகம் பகவானை நோக்கி தன் நோயை குணமாக்கும்படி வேண்டும் பிரார்த்தனையாகவே அமைந்துள்ளது. நாராயணீயத்தின் அடிப்படை நோக்கமே பிறவிப் பிணிகள் நீக்கப் பெற்று மோஷ சாதனத்தை அடைவதேயாகும். எனவே தான் நாராயணீயத்தின் கடைசி 100 வது தசகத்தை முடிக்கும்போது நாராயணீயம் என்ற இந்த ஸ்தோத்திரம் உலகில் உள்ளவர்களுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சௌகரியத்தையும் அளிக்கட்டும் என வேண்டி கவிஞர் முடிக்கின்றார். 

இந்த இலக்கியம் முழுவதுமே குருவாயூரப்பனையே நேரில் அழைத்து உரையாடுவது போல் அமைந்துள்ளது. மேலும் அது அந்த உலகம் காக்கும் உத்தமனின் நேரடியான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த நூலை தொடங்கியதிலிருந்து கவிஞரின் நோயும் குறையத் தொடங்கியது. இன்னும் டாக்டர் பலராலும், மருந்துகளாலும் குணமாக்க முடியாத நோய்கள் எல்லாம் நாராயணீயத்தைப் பாராயணம் செய்வதால் குணமடைவதாக நம்பப்படுகிறது.  

குறிப்பிட்ட ஸ்லோகம் சக்திவாய்ந்த பீஜாட்சரங்கள் அடங்கியது என்றும், அதைப் பாராயணம் செய்வதால் நோய்கள் நீங்கி நலம் பெறுவது உறுதி என்றும் பரமாச்சாரியார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார். அந்த குறிப்பிட்ட ஸ்லோகம் நாராயணீயத்தில் எட்டாவது தசகத்தில் கடைசியாக வருவதாகும். 

காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார். 

அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின்னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு... என்று அருளியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள். 

இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்: 

அஸ்மின் ப்ராத்மன் நநு பாத்ம கல்பே 

த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி 

அனந்த பூமா மம ரோக ராசிம் 

நிருந்தி வாதாலய வாஸ் விஷ்ணோ 

இந்த ஸ்லோகத்தின் பொருள் - பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பத்ம கலபத்தில் பிரம்மதேவனை இங்கனம் தோற்றுவித்தவரும், அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக்கட்டத்தை அடக்கி அருள வேண்டும்.  

நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் 16, 32, 108 எனும் அடிப்படையில் கூறிவர வியாதிகள் நீங்கி பரிபூரண குணமடைவார்கள்.