புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம். எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் செய்வதா..?

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் நேரத்தில், விவசாயிகளின் கஷ்டம் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை என்று விமர்சனம் செய்தார்.


இந்த விவகாரம் புதுவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து நாராயணசாமியின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழக முதல்வரைப் பற்றிக் குறை கூற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதல்வரின் போராட்ட அறிவிப்பு என்பது சட்டப்படி குற்றச் செயலாகும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சியினரால் நடத்தப்பட இருக்கும் போராட்டத்திற்கு இயற்கை பேரழிவு மேலாண்மைச் சட்டம், தொற்று நோய்கள் சட்டம் (1897) ஆகியவற்றின்படி தடை விதிக்க வேண்டும். மீறிப் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.’’ என்று கோரியிருக்கிறார். 

’’விவசாயிகளைப் பற்றியோ, விவசாயத்தைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத நாராயணசாமிக்கு தமிழக அரசைப் பற்றியோ, தமிழக முதல்வரைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. குறுக்கு வழியில் பதவிக்கு வந்துவிட்டு, தனது முதல்வர் பதவிக்காக, புதுச்சேரி மாநில திமுகவிடம் காங்கிரஸை நாராயணசாமி அடகு வைத்துவிட்டார். திமுக தலைவரைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி நாராயணசாமி பேசியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்" என்று அ.தி.மு.க. கொறாடா வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தேவையில்லாத விஷயங்களைப் பேசி வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார் நாராயணசாமி.