நாங்குநேரி தொகுதி தி.மு.க.வுக்குத்தான்… டென்ஷனில் காங்கிரஸ்

நெல்லை மாவட்டம் நான்குனேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரசின் வசந்தகுமார் கடந்த எம்.பி தேர்தலின்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் காலியான நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரசின் ரூபி மனோகரனை தோற்கடித்து அதிமுகவின் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ ஆனார்.


வரும் தேர்தலிலும் இந்தத் தொகுதியை காங்கிரஸ் வசம் ஒப்படைத்தால் தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையால், இதனை தி.மு.க.வே கையில் எடுத்துக்கொள்ளும் முடிவில் இருக்கிறதாம். இந்த தகவல்தான் காங்கிரஸை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

கடந்த 1989க்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. நடேசன் பால்ராஜ், வசந்தகுமார், எர்ணாவூர் நாராயணன், ரூபி மனோகரன் என போட்டியிட்ட பெரும்பாலானோரும் வெளியூர்வாசிகள் என்பதால் உள்ளுர் கட்சிக்காரர்கள் மத்தியில் ரொம்பவே சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற தொகுதி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது ஸ்டாலினிடம் நாங்குநேரி தொகுதி பற்றி கேட்டுள்ளனர், . அப்போது ஸ்டாலின் ,’’இந்த முறை தொகுதி திமுகவுக்குத்தான். அதிலும் உள்ளுர் வேட்பாளருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்’’ என பூடகமாகக் கூறியிருக்கிறார்.

இதனால் தொகுதிக்குட்பட்ட களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி ராஜன் தெம்பாக களமிறங்கி வேலைபார்க்க ஆரம்பித்திருக்கிறார். போட்டிக்கு கனிமொழி அணியைச் சேர்ந்த சென்னைவாசியான ஆரோக்கிய எட்வின் என்பவரும் மல்லுக்கட்டுகிறார்.

திமுகவில் இன்னொரு போட்டியாளராக வர்த்தக அணி துணைத் தலைவர் கிரகாம்பெல். ’’தலைவரோட கிச்சன் கேபினட்டை பிடித்தாகிவிட்டது. அதனால நிச்சயம் சீட் எனக்குத்தான்’’ என டிக்ளர் செய்துள்ளார். ஆக, காங்கிரஸ் கண் சிவக்கிறது.