குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி இன்று போராட்டம்..!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் இன்றைய தினம் சுமார் 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர்.


கடந்த 9ம் தேதி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது இதனை எதிர்த்து வடமாநிலங்களான டெல்லி அசாம் மணிப்பூர் திரிபுரா ஆகிய இடங்களில் மிகப்பெரிய கலவரங்களும் போராட்டங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து மாநிலங்களவையிலும் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்ட திருத்த மசோதாவில் ஆப்கானிஸ்தான் , வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது . ஆனால் இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் சேர்க்காதது ஏன்? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுகிறார்களா மத்திய அரசு? என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை இந்த மசோதா அமலுக்கு வந்தால் இந்திய நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு இது எதிராக அமையும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வட மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இந்த திருத்த மசோதாவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . பல கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றைய தினம் தங்களது கட்சியின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருக்கிறார். இந்தப் போராட்டமானது சுமார் 10 மணி அளவில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும். 

இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை போல் மற்ற சில கட்சிகளும் இணைந்து ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.