சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்..! என்ன நடக்கிறது அங்கே…?

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை ,முதலாம் ஆண்டு மாணவர் டாக்டர் கண்ணன் இன்று அதிகாலை மர்மமான முறையில் மரணமடைந்துள்ள விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாணவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன வென்று தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள் உள ரீதியான பாதிப்புகளுக்கு அதிக அளவில் உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்களை கண்டறிந்து போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முது நிலை மருத்துவ மாணவர்கள் ,பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 24 மணி முதல் 36 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணி செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதனால் உள மற்றும் உடல் உளைச்சல்களுக்கு உள்ளாகிறார்கள். எனவே, எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கு வதை கைவிட வேண்டும். மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர்களுக்கு உரிய மன நல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்க வேண்டும். மருத்துவ மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து,சரி செய்ய , கல்லூரி அளவிலும், மாநில அளவிலும் பெற்றோர்கள்,அரசு சாரா அமைப்புகள் அடங்கிய 'குறை தீர்க்கும் குழு' அமைக்க வேண்டும்.

டாக்டர் கண்ணன் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.