மூலிகை நடராஜர்! இயற்கையாகவே நெற்றியில் தோன்றும் விபூதி மூன்று பட்டைகள் தோன்றும் அதிசயம்!

இந்த உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதன் காரணம் எம்பெருமான் ஈசன் தொடருந்து நிகழ்த்தும் திருத்தாண்டவம் தான் என்கின்றன வேத புராணங்கள்.


போகர் நான்காயிரம் என்ற நூலில் கூறப்பட்ட விதிகளின் செயல்முறைகளைக் கொண்டு பல வகை மூலிகைகளைப் பயன்படுத்தி ஐம்பொன்னை உருக்கி சுத்திகரித்து அதன் மூலம் அமைக்கப்பட்ட மிகப் பெரிய நடராஜர் சிலை அமைந்த தலம் நெய்வேலி.

இத்தலத்தில் நடராஜர் அமைப்பில் பல தனிச்சிறப்புகள் உண்டு. நடராஜப் பெருமாள் இத்தலத்தில் 10 அடி, ஒரு அங்குல உயரம் உயரமும் 8 அடி 4 அங்குல அகலமும் 2420 கிலோ எடையும் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். சிவகாமி அம்மையின் சிலை 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்டது. மற்ற சிவத்தலங்களில் நடராஜபெருமானின் பாதத்தின் கீழ் மாணிக்கவாசகப் பெருமாள் காணப்படுவார். இத்தலத்தில் திருமூலர் உள்ளார். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை தில்லையம்பதியான சிதம்பரத்தில் சிவபெருமான் எழுதி மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான் எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார்.

இதனடிப்படையில் இத்தலத்து நடராஜர் அழகிய சிற்றம்பலமுடையவான் என்ற பெயரில் அருள்பாலிப்பதோடு தன் இடது காலைத் தூக்கி ஆட அவரின் அருகில் இடப்பாகத்தில் அவரது திருநடனத்திற்கு ஏற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி ஓசை கொடுத்த நாயகி என்ற திருப்பெயர் தாங்கி ஐயனின் உடன் இருந்து அருள் பாலிக்கிறார்

பஞ்சசபை சிவத்தலங்கள் போல இங்குள்ள சபை, நடராஜர் தியானசபை, பளிங்கு சபை எனவும் சிறப்பிக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி அமைக்கப் பட்ட சன்னதியில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் இயற்கையாகவே நெற்றியில் விபூதி போல் மூன்று பட்டைகள் காணப்படுவது அதிசயமாகும். இதனை அபிஷேக சமயங்களில் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இங்குள்ள நவகிரக சன்னதியானது ஒரே கல்லால் ஆனதோடு வட்ட வடிவ அமைப்பில் தேரில் நிலை போன்று சூரியன் நடுவில் தாமரை வடிவிலும் மற்ற நவக்கிரகங்களும் அமர்ந்து தவநிலையிலும், தேர்ப்பாகன் அருணன் தேரை ஓட்டுவது போன்றும், ஏழுநிலை குதிரைகள் இழுத்த வடிவ அமைப்பிலும் இருக்க, அஷ்டதிக்பாலகர்கள் தேரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளனர்.

ஆலய வாயிலின் இடதுபுறம் ஆராய்ச்சி மணியும், மனு நீதிக்கேட்டு முறையிடும் பெட்டியும் அமைக்கப்பட்டு அதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள், தேவைகள் என அவர்களின் மனக்குறைகளை எழுதி பூஜை நேரத்தின்போது போட்டு பின்னர் மூன்று முறை மணியை ஒலிக்கச் செய்து கோவிலை வலம் வந்து வேண்டிச் செல்வர். மறுநாள் காலை பூஜையின் போது நடராஜர் முன் அது ரகசியமாகப் படிக்கப்பட்டு பின் எரியூட்டப்படும். இதனால் பக்தர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறதாம்.