பத்து வருசமா வேலை பாக்குறோம்..! வெறும் 7 ஆயிரம் தான் சம்பளம்! வீதிக்கு வந்த முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள்!

2000 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய போதும் தங்கள் வருமானம் உயரவில்லை என்று முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.


தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் முக்கியமான ஒன்று முத்தூட் பைனான்ஸ். கேரள மாநிலத்தில் மட்டும் இந்நிறுவனத்திற்கு 650க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய். மொத்த வருவாய் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய். முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் இவ்வளவு லாபம் ஈட்டிய போதும் அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பத்து இருபது ஆண்டுகள் பணிபுரிந்து ம் இன்னும் 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ஊதியம் வருவதாக கிளை மேலாளர்கள் தொடங்கி குமாஸ்தாக்கள் வரை பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி அவர்களது போராட்டம் 14 ஆவது நாளாக நீடிக்கிறது. இருப்பினும் நிதிநிறுவன நிர்வாகத்திலிருந்து எந்த ஒரு சமரசப் பேச்சும் நடத்தப்படவில்லை. சிஐடியு தொழிற்சங்கத்தின் தூண்டுதலால் தான் இந்த போராட்டம் நடப்பதாக முத்தூட் பைனான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் சிஐடியு விற்கும் இந்த போராட்டத்திற்கு தொடர்பில்லை என்று முத்தூட் பைனான்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தை குற்றம்சாட்டி உள்ள அவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் இருப்பதாகவும் ஆனால் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

2016ம் ஆண்டு தங்களுக்கென கூட்டமைப்பை உருவாக்கிய பின்னர் அதன் நிர்வாகிகள் திட்டமிட்டு வேட்டையாடப் படுவதாகும் ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது ஒருபுறமிருக்க செயல்திறனை காரணம்காட்டி கிளைகளை மூடப் போவதாக முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மிரட்டி வருகிறது. இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.