முஸ்லீம்களுக்கு உத்தரபிரதேசத்தில் கடும் சோதனை, வேதனை! கொந்தளிக்கும் இஸ்லாம் அமைப்புகள்!

இன்று உத்தரபிரதேசத்தில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதுகுறித்து ஜவாஹிருல்லா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கடந்த இரு வாரங்களாக 2 கோடி முஸ்லிம்கள் வாழும் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்னெப்போதும் காணப்படாத காவல் கொடுங்கோன்மைகள் நடைபெற்று வருகின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் காவல்துறை இன அழிப்பிற்கு இணையான வன்முறையை முஸ்லிம்கள் மீது நடத்தி வருகின்றது.

லக்னோ, முசப்பர்நகர், மீரட் மற்றும் பிஜினோர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுள்ள கொடுங்கோன்மைகள் குறித்து வெளிவந்துள்ள காணொலிகள் அம்மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் மீது மாநில அரசு ஒரு போரைத் தொடுத்துள்ளது என்ற தோற்றத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளன.

ரத்த வெறியுடன் உ.பி. காவல்துறையினர் தெருக்களில் அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் புகுந்து குடியிருப்போரைத் தாக்கி சொத்துகளை நாசப்படுத்தி முஸ்லிம்களை ஊரை விட்டு விரட்டும் கொடுங்கோன்மையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான குடிமக்கள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களைப் பழிவாங்குமாறு முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

முஸ்லிம் சிறார்களும், மனநோயாளிகளும் கூட இந்த தாக்குதலிருந்து தப்பவில்லை. சிறுவர்கள் உட்பட 10,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1000 குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட 26 முஸ்லிம்களில் 18 பேர் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளார்கள்.

தினமும் முஸ்லிம்களின் சொத்துகள் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறி முஸ்லிம்கள் மீது பல லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பால் உறுதி எடுத்துக் கொண்டு முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தில் வாழும் மக்களில் ஒரு சாரார் மீது கொலைவெறித் தாக்குதலை ஏவிவிட்டு பதவியில் தொடர்வது அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகும். உடனடியாக ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கலைப்பதற்கும் இன அழிப்பில் ஈடுபட்ட அவர் மீதும் காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு குடியரசுத் தலைவர் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடு வன்முறைக் காடாக மாறுவதற்குக் காரணமாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.