இந்து கோயில் அர்ச்சகர்களுக்கு இஸ்லாமியர்கள் சிலர் நிவாரண உதவி வழங்கியிருப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள்..! தட்சிணை கிடைக்காமல் தவித்த அய்யர்கள்! அள்ளிக் கொடுத்த முஸ்லீம்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,77,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 25,55,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இன்றுவரை 1596 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 635 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதிலும் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எந்த ஒரு சுபநிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெறாத காரணத்தினால் சிறிய கோவில்களை சேர்ந்த அர்ச்சகர்கள் வாழ்வாதாரமின்றி மிகவும் தவித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யங்கடை தெருவில் பள்ளிவாசல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிவாசலில் "இமாம் முகமது ருஸ்தும் அலி ஏற்பாட்டின்படி ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை" என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் நலிந்தோருக்கு பல்வேறு இஸ்லாமியர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
வடக்கு வீதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை சேர்ந்த அர்ச்சகருக்கு இஸ்லாமியர்களில் சிலர் 800 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த செய்தியானது அப்பகுதியில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்த ஊரடங்கு காலத்தில் தவித்து வரும் இஸ்லாமியர்களுக்கு எங்களால் இயன்ற உணவுப்பொருட்களை வழங்கினோம். இதே போன்று கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றுபவர்கள் வேலையின்றி தவித்து வருவதால் அவர்களுக்கும் உதவ முன் வந்தோம். இது இரு மதத்தினரிடையே நிலவிவரும் சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டுவது போன்று மன நிம்மதி அளிக்கிறது" என்று கூறினார்.
இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.