குடியுரிமை திருத்த மசோதாவின் நகலை மக்களவையில் அதிரடியாக கிழித்தெறிந்தார் ஓவைசி..! அதிர்ச்சியில் நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த குடியுரிமை திருத்த மசோதா நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசி அனைவரது முன்னிலையில் அதிரடியாக கிழித்தெறிந்தார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் குடியுரிமை திருத்த மசோதாவை அனைவரது முன்னிலையிலும் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வந்தனர் . இதனால் வட கிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் போராட்டமும் நிலவி வந்தது. இருப்பினும் வெற்றிகரமாக இந்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்ற கட்சியினரை போலவே இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசி குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து பேச ஆரம்பித்தார். பின்னர் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி கையிலிருந்த மசோதாவின் நகலைக் கிழித்து எறிந்தார். 

அவர் மசோதாவைக் கிழித்தபின்பு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பரபரப்பு சற்றுநேரம் உலவியது. மேலும் பேசிய அவர், இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் சீனாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரை ஏன் இதில் சேர்க்கவில்லை ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்படியென்றால் நீங்கள் சீனாவை கண்டு பயப்படுகிறீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றி மத பிரிவினைக்கு வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமையும் எனவும் அவர் கூறினார். கடைசியில் இது ஹிட்லர் போட்ட சட்டத்தை விட மோசமானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.