முருகன் இட்லி கடை சாப்பாட்டில் புழு! லைசென்சை ரத்து செய்து சீல் வைத்த அதிகாரிகள்!

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் முருகன் இட்லி கடை மீது ஏற்கெனவே மின்சார முறைகேடு புகார் உள்ளது. இந்த நிலையில் ஒரு புழு விவகாரத்தில் இட்லி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


மதுரையில் காபிக்கடையாக தொடங்கி இட்லிக் கடையாக மாறியதுதான் முருகன் இட்லிக் கடை வரலாறு. இன்று முருகன் இட்லிக்கடை தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 17 கிளைகள் உள்ளது.

கடந்த 7ம் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடைக்கு ராதாகிருஷ்ணன் எனும் வழக்கறிஞர் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் புழு இருந்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் இட்லி கடைகளிலும், அதன் உற்பத்தி மையங்களிலும் திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையினர் மூலம் அதிரடி சோதனை நடந்தது.

அம்பத்தூர் முருகன் இட்லி கடையில் இருந்துதான் பல முருகன் இட்லி கடைகளுக்கு உணவுகள் எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் உணவு தயாரிக்க தேவையான பொருட்கள் இங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. இந்த உற்பத்தி கூடத்திற்குத்தான் தற்போது சீல் வைத்து இருக்கிறார்கள்.

அங்கு உணவுப் பொருட்கள் மிகவும் பாதுகாப்பற்ற முறையிலும், சுகாதாரமற்ற முறையிலும் இருந்துள்ளன. மேலும் உணவுகள் அனைத்தும் தூசி படியும் வகையில் இருந்துள்ளன. உணவு சமைப்பவர்கள் வழக்கமாக பெற்று இருக்க வேண்டிய மருத்துவ சான்றிதழையும் பெறவில்லை. எனவே தான் அங்கு கடை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முருகன் இட்லி கடையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் இட்லி கடை கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் தடை மீதான முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.