கள்ளக்காதலர்கள் ஜாக்கிரதை! பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்பட பாணியில் கொள்ளையடிக்கும் கும்பல்!

ரிசார்ட்டில் தங்கும் திருமணமாகாத ஜோடிகளையும், கள்ளக் காதலர்களையும் மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார்கைது செய்துள்ளனர்.


மலாடை அடுத்த சின்சோலி என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தங்கிய ஒரு ஜோடியை மூன்று பேர் கொண்ட கும்பல் நோட்டம் விட்டதாகவும் அந்த ஜோடி குறித்து விசாரித்து அவர்கள் கள்ளக் காதலர்கள் என்று தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த ஜோடி விடுதியைக் காலி செய்துவிட்டுப் புறப்பட்ட போது அவர்களை வழிமறித்த அந்தக் கும்பல் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு கடுமையாக விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களது கள்ளக் காதல் குறித்து அந்த நபரின் மனைவியிடம் கூறிவிடுவதாகவும், அவர்களை கைது செய்து விடுவதாகவும் மிரட்டிய அந்தக் கும்பல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என மிரட்டியதாகவும் இதனால் பீதியடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த 12 ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என அந்தக் கும்பல் மிரட்டி விட்டுச் சென்ற நிலையில் அந்த நபர் நடந்தது குறித்து விடுதி மேலாளரிடம் தெரிவித்து விட்டுச் சென்றார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி அந்தக் கும்பலை விடுதி அருகே மீண்டும் பார்த்த விடூதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். 

அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் மலாட்கர், சச்சின் கார்பி, கோபால் கோட்கே என்ற மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் ஏற்கனவே பல விடுதிகளில் இது போன்ற தவறான ஜோடிகளிடம் திட்டமிட்டுப் பணம் பறித்தது தெரியவந்தது.