மதுபான விடுதிக்கு கணவனுடன் வந்த பெண்ணுக்கு 4 தொழில் அதிபர்களால் நேர்ந்த விபரீதம்!

இரவு பப் ஒன்றில் பெண்ணிடம் அத்துமீறிய 4 தொழிலதிபர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த சனிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் அந்தப் பெண் தனது கணவனுடனும், கணவனின் தங்கையுடனும் ஜுஹுவில் உள்ள ஒரு பப்புக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பலில் இருந்த் ஹ அக்‌ஷய் ராஜ் என்பவன் அந்தப் பெண் குறித்து கீழ்த் தரமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதனை அந்தப் பெண்ணும், அவரது கணவரும் அலட்சியப் படுத்திவிட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றொருவன் பெண்ணைத் தவறான இடத்தில் தொட்டதோடு தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த பெண்ணின் கணவர் பப் ஊழியர்களை பிரச்சினையில் தலையிடுமாறு அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பலில் இருந்த 4 பேரும் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். 

அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்துக்கு  தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த நபர்கள் மது அருந்தியதும் அதனைத் தொடர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துகொண்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் அக்‌ஷய் ராஜ், மற்றும் அவனது நண்பர்களான  ராகுல் சின்ஹா, அருண் சிங் கோலி, விராஜ் சிங் ஆகியோரை கைது செய்த போலீசார் , பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல், தாக்கி காயப்படுத்துதல், பொதுவான தவறான நோக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.