அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறார் முகுல் வாஸ்னிக்! யார் இவர் தெரியுமா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது.

இதனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் மேலிடத்தை அதிர வைத்தார். இதன் பிறகு ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைமை இல்லாமல் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முரணான நிலைப்பாட்டை எடுத்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் காட்சியின் முரண்பட்ட நிலைப்பாட்டால் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தலைமை இல்லாதது தான் காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே இனியும் ராகுல் காந்தியை கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம் என்று சோனியா முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து நாளை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

தற்போதைய சூழலில் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் முகுல் வாஸ்னிக் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராகவும் முகுல் வாஸ்னிக் இருந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோனியாவின் உதவியாளராகவும் முகுல் வாஸ்னிக் செயல்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்புகளை நன்கு அறிந்தவர் முகுல் வாஸ்னிக். 59 வயதாகும் இவர் அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் சுமூகமான பழக்கத்தை வைத்திருப்பவர். எனவே காங்கிரஸ் கட்சிக்கான நிர்வாகிகள் தேர்தல் வரை முகுல் வாஸ்னிக் தலைவராக செயல்படுபவார் என்று கூறப்படுகிறது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முகுல் வாஸ்னிக் இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பணியாற்றியவர்.