சூரியன் கோயில், குஜராத் அல்லது சூரியன் கோயில், மோதேரா (Sun Temple, Modhera) சௌராட்டிர தேசத்தை ஆண்ட சோலாங்கி வமிச மன்னர் முதலாம் பீமதேவனின் மனைவியால், கி. பி., 1026 இல் கட்டி சூரிய பகவனுக்கு அர்பணிக்கப்பட்டது.
சூரிய கோயில் மகிமை தெரியுமா? தங்கச்சிலையில் ஜொலித்த வைரங்கள் எங்கே?

மோதேரா சூரியன் கோயில், குஜராத் மாநிலத்தில் மெகசானா மாவட்டத்தில், புஷ்பாவதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. ஸ்கந்த புராணம் மற்றும் பிரம்ம புராணத்தின்படி மோதேராவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பண்டைய காலத்தில் தரும ஆரண்யம் (மறைக் காடு) என்ற பெயரால் அறியப்படுகிறது., பிறப்பால் வேதியனாகிய இராவணனை போரில் வென்று கொன்றதால் தன்னை பீடித்த பிரம்மஹத்தி தோஷம் (வேதியனை கொல்வதால் பீடிக்கும் பாவம்) நீங்க வழியினை கூறுமாறு இராமர் தன் குலகுரு வசிட்டரிடம் கேட்டார்.
அதற்கு வசிட்டர் தற்போதைய மோதேராவிற்கு அருகே உள்ள தரும ஆரண்யத்திற்கு (மறைக் காட்டிற்கு) சென்று மகாதேவனை வழிப்பட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனக் கூறினார். அதன்படியே இராமர், தரும ஆரண்யத்தில் உள்ள மோதராக் எனும் கிராமத்தில் குடில் அமைத்து யாகம் செய்து மகாதேவரை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். பிற்காலத்தில் இக்கிராமத்திற்கு மோதேரா எனும் பெயராயிற்று.
சோலங்கி மஹாராஜாக்கள் சூரியனின் வழித்தோன்றல்கள் – அதாவது சூரிய வம்சத்தினர் என்பதால் சூரியனுக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள். இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச் மற்றும் 21 செப்டம்பர் ஆகிய தினங்களில் சூரியனின் முதல் கிரணங்கள், இக்கோவிலில் இருந்த சூரியனாரின் சிலையின் மீது படும்படி அமைத்திருந்தார்களாம்
சூரியனார் கோவில் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது –குட மண்டபா, சபா மண்டபா மற்றும் சூர்ய குண்ட் – மூன்றுமே தனித்தனியாக தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கிறது. குட மண்டபா என்பதில் தான் சூரியனார் சிலை அமைக்கப்பட்டிருந்த கர்பக்கிரஹம். சபா மண்டபா நிகழ்ச்சிகளை நடத்தும் இடம் மற்றும் சூர்ய குண்ட் எதிரே அமைக்கப்பட்ட குளம். ஒவ்வொன்றுமே மிகச் சிறப்பான சிற்பங்களை தன்னகத்தே கொண்டவை.
சூரியனார் கோவிலில் இருந்த சிலை பற்றி சில கதைகள் உண்டு. சூரியனின் சிலை முழுவதும் தங்கத்தினால் செய்யப்பட்டது என்றும் அச்சிலையில் பதித்திருந்த வைரக்கற்கள் ஜொலிப்பதனால் கோவிலே பிரகாசமாக இருந்ததாகவும் செவிவழி செய்திகள் சொல்கின்றன. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அமர்ந்திருக்க, அத்தேரினை அருணன் வழி செலுத்தும் வடிவத்தில் அச்சிலை அமைக்கப்பட்டிருந்ததாகவும், கோவில் அமைக்கப்பட்ட நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு கஜினி முகமது இந்த தங்கச் சிலையை உடைத்து தன்னுடன் எடுத்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது.!
சிலை தவிர, சிலைக்குக் கீழேயும் தங்கக் காசுகள் நிரம்பி இருந்ததாகவும், அது தவிர கோவில் கர்பக்கிரகம் அமைந்திருந்த குட மண்டபாவின் கீழ் வழியே சோலங்கி ராஜாவின் அரண்மனை அமைந்திருந்த பாடண் நகருக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதை அமைந்திருந்தது என்றும் சொல்கிறார்கள். எண் கோண வடிவத்தில் அமைந்திருக்கும் குடமண்டபாவில் உள்ளே அமைக்கப்பட்ட சூரியனார் சிலை தவிர வெளிப்புறத்திலும் பன்னிரெண்டு ஆதித்யர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சூரியனுக்கும் தாமரை மலருக்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக இக்கோவிலின் அடிப்பகுதி கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரை மலர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேலாக யானைகளின் வரிசை கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது.
சபா மண்டபா: எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட இந்த மண்டபமும் மிகவும் அழகிய சிற்பங்களைக் கொண்டவை. வெளியே இரண்டு பெரிய தூண்களும் உள்ளே 52 தூண்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 52 தூண்கள், 52 வாரங்களைக் குறிப்பவை எனச் சொல்கிறார்கள். இந்தத் தூண்களில், ராமாயணம், மஹாபாரதம், கிருஷ்ண லீலா போன்ற காப்பியங்களிலிருந்து காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.
சூர்ய குண்ட்: மோதேரா சூரியனார் கோவிலின் ஒரு பகுதியாக இருக்கும் சூர்ய குண்ட் ஒரு அழகிய குளம் – பிரமிட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வடிவியல் அமைப்புகள் பிரமிக்க வைப்பவை. இதைக் குளம் என்று சொல்வதை விட படிக்கிணறு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட இக்குளத்தின் நான்கு புறங்களிலும் படிகள், ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய பெரிய கோவில் கோபுரங்கள் என அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
நான்கு பக்கத்திலும் இருக்கும் நான்கு பெரிய கோபுர வடிவங்களின் கீழே பிள்ளையார், விஷ்ணு, நடராஜர் [ஷிவன்] மற்றும் ஷீத்லாமாதா ஆகியோரின் சிலைகள் உண்டு. மற்ற சின்னச் சின்ன கோவில்களிலும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கை 108!