3வது மாடி பால்கனியில் அலட்சியம்! தாயின் கைகளில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை! பதற வைக்கும் சம்பவம்!

3-வது மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கொண்டித்தோப்பு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட சரவணன் தெருவில் அருண் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அருணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. வாடகை வீட்டில் 3-வது மாடியில் வசித்து வந்தனர்.

இத்தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 1.5 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். நேற்று ஜெயஸ்ரீ தன்னுடைய இளைய மகளுக்கு வீட்டு பால்கனியிலிருந்து உணவு அளித்து கொண்டிருந்தார். அப்போது ஜெயஸ்ரீ கையிலிருந்த குழந்தை தவறி விழுந்துள்ளது. 3-வது மாடியிலிருந்து குழந்தை கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தும், துரதிஷ்டவசமாக குழந்தை இறந்து போனது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கொண்டித்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.