யானை குட்டியை தாக்கிய இளைஞனுக்கு தாய் யானையால் ஏற்பட்ட விபரீதம்!

தன் குட்டியை தாக்கிய இளைஞரை, யானையொன்று துரத்திச்சென்று காலால் மிதித்து கொன்ற சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கம் மாநிலத்தில் மெடினிபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதனருகே அஜ்னசுலி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் பல வனப்ப்பகுதிகளுக்கு அண்மையில்  இருப்பதால் யானைகள் காட்டிலிருந்து ஓடி வந்து இந்த கிராமத்தில் அட்டகாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

அந்த வனப்பகுதியை சேர்ந்த ஒரு யானை ஒரு குட்டியை ஈன்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அப்பகுதிக்கு அருகேயுள்ள வறன்ட ஏரியொன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனையறிந்த கிராமவாசிகள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க சென்றனர். மேலும் பல போட்டோக்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர். 

இதனிடையே பிறந்து சில மணிநேரமேயான அந்த குட்டி யானையின் உடல்நிலை மோசமாக தொடங்கியது. மிகவும் அசதியாக அந்த யானை காட்சியளித்தது. ஆகையால் அதனால் எழுந்து நிற்கக்கூட  முடியவில்லை. இதனால் குட்டி யானையை காட்டிற்குள் அழைத்து செல்ல தாய் யானை மிகவும் சிரமப்பட்டது.

கிராமத்தில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே போனது. மக்களால் குட்டிக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்று அஞ்சிய தாய் யானை அஞ்சியது. உடனே  'ஏரியில் இருந்த மண்ணைக் கிளறிவிட்டு, தொடர்ந்து பிளிற்ந்து கொண்டே இருந்தது.மேலும் தங்கள் அருகே யாரும் வரவேண்டாம் என்றவாறு பல்வேறு செயல்பாடுகளை செய்தது. தனது குட்டி யானையை எழுந்து நிற்க வைக்க பல முயற்சிகளை எடுத்து தாய் யானை கடுமையாக போராடியது.

அசம்பாவிதமாக திடீரென கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் குட்டியானை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனை கண்ட தாய் யானை கடும் கோபமடைந்து மக்கள் கூட்டத்தை நோக்கி மதம் பிடித்தவாறு ஓடியது. அப்போது கூட்டத்தில் இருந்த ஷைலன் மஹடோ என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக யானையிடம் சிக்கினார். அப்போது தாய் யானை மிதித்து புரட்டியெடுத்தது. படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே தாய் மற்றும் குட்டி யானைகளை காப்பாற்றுவதற்காக காட்டிற்குளிருந்து வந்த 10 யானைகள் ஏரியில் இருந்த தாய் மற்றும் குட்டி யானைக்கு பாதுகாப்பு அளித்தது. அப்போது அதிலிருந்த 3 யானைகள் கூட்டத்தில் இருந்த மக்களை விரட்டி அடித்தது.

செய்தியறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த மக்களை அப்புறபடுத்தினார்கள். இனிமேல் யாரும் ஏரிக்கு அருகில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய் யானை மிகவும் கோபமாக இருப்பதால்,வனத்துறையினரும் யானையின் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தாய் யானை தன் குட்டியை காக்க சிரமப்பட்ட காட்சிகளை தற்போது வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு வைரலாகி வருகிறது.