குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு இளம்பெண் உணவு டெலிவரி செய்யும் செய்தியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதுகில் உபேர் பேக்..! நெஞ்சில் பச்சிளம் குழந்தை! பழைய டிவிஎஸ் மொபட்! ஒரு ஜான் வயித்துக்காக டெலிவரி உமனான வள்ளி!
சென்னையில் வள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.சி சைக்காலஜி பட்டம் பெற்றவர். இவருடைய கணவர் செக்யூரிட்டி பணியாற்றிவருகிறார். இவர்களுடைய சம்பாத்தியம் குடும்பத்திற்கு பத்தாது என்பதற்காக உணவுகளை டெலிவரி செய்யும் வேலைகளை பார்த்து வருகிறார்.
இருசக்கர வாகனத்தில் பின்னே உணவு டெலிவரி செய்யும் பையை சுமந்து கொண்டு முன்னர் ஒன்றரை வயது குழந்தையை சுமந்து பிஸியாக இருக்கும் சென்னை சாலைகளில் வாகனத்தை ஓட்டுகிறார்.
அவரிடம் இந்த முடிவைப்பற்றி கேட்டபோது, "என்னுடைய மகனின் பெயர் சாய் கிஷோர். அவனின் வயது 1.5. அவனுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக நான் இந்த முடிவை மேற்கொண்டேன். என்னுடைய மகனின் எதிர்காலத்திற்காக நான் செய்யும் எந்த ஒரு வேலையும் எனக்கு சிரமமாக தெரியவில்லை. குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது மட்டுமே எனக்கு சற்று சவாலாக இருக்கிறது" என்று கூறினார்.
பொதுவாக டெலிவரி வேலைகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் சமூகத்தில், ஒரு பெண் 1.5 வயது ஆண் குழந்தையுடன் டெலிவரி செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.