வாழைப்பழத்தில் விஷம்..! உணவுக்காக ஓடி வந்த குரங்குகளை கொன்று குவித்த கொடூர நபர்! திருவண்ணாமலை பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளுரில் மர்ம நபர்கள் வாழைப்பழத்தில் விஷம் வைத்து 15க்கும் மேற்பட்ட குரங்குகளை கொன்றுள்ளனர்.


தற்போது கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வருகிற மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வருவதாலும் அவர்களின் நடமாட்டம் வெளியே மிகக் குறைவாக இருப்பதாலும், இந்த காலகட்டங்களில் விலங்குகள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைப்பழத்தில் விஷம் வைத்து குரங்குகளை கொன்ற கொடூர நிகழ்வு நடந்தேறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்த தெள்ளூர் என்ற கிராமத்தில் குரங்குகள் பரவலாக வாழ்ந்து வருகின்றன. மர்ம நபர்கள் சிலர் வாழைப்பழத்தில் விஷத்தைக் கலந்து 15க்கும் மேற்பட்ட குரங்குகளை கொன்று குவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகளை அப்பகுதியில் உள்ள மலை அருகே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதைப்பற்றி சம்பவம் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் குற்றவாளிகள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழைப்பழத்தில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.