மோடி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார் கலைஞரின் மகன் மு.க.அழகிரி!

மு.க.அழகிரி


   தி.மு-க தலைவர் கலைஞரின் மகன் மு.க.அழகிரி மோடி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

   கலைஞர் இருந்த போதே திமுகவில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டார். கலைஞர் மறைவை தொடர்ந்து மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த அழகிரியை தி.மு.கவில் சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் மறுத்து வருகிறார். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பேச்சுவார்த்தை, மூத்த கட்சி பிரமுகர்கள் வாயிலாக தூது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் அழகிரியால் ஸ்டாலினை நெருங்க முடியவில்லை.

  ஒரு கட்டத்தில் கலைஞர் சமாதியை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் அழகிரி ஊர்வலமும் நடத்திப் பார்த்தார். ஊர்வலத்தில் தி.மு.கவினர் குறிப்பிடத்தக்க அளவு கூட கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தி.மு.கவில் மீண்டும் சேர வேண்டும் என்கிற ஆசையை அழகிரி ஒதுக்கிவைத்துவிட்டார். அவரையும் வேறு கட்சியினரும் கூட ஒரு பொருட்டாக கருதவில்லை.

   கலைஞர் சமாதியை நோக்கிய அழகிரியின் ஊர்வலத்துடன் அவரது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிட்டதாக பேச்சுகள் எழுந்தன. ரஜினி கட்சியில் சேர அழகிரிக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ரஜினியும் தற்போதைக்கு கட்சி ஆரம்பிப்பது போல் இல்லை. இந்த நிலையில் தான் பா.ஜ.கவில் இருந்து அழகிரிக்கு அழைப்பு வந்துள்ளது.

   கலைஞர் மறைவுக்கு பிறகு அழகிரியை சிறிது நாட்கள் பா.ஜ.க மேலிடம் மறைமுகமாக இயக்கி வந்தது. ஆனால் அழகிரியால் ஒரு மாவட்டச் செயலாளர்களை கூட ஸ்டாலினிடம் இருந்து பிரித்து கொண்டுவர முடியவில்லை. இதனால் அழகிரி விஷயத்தில் இருந்து பா.ஜ.கவும் ஒதுங்கியது. ஆனால் தற்போது மோடிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

  ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கவும், பர்சனலாக ஸ்டாலினை எதிர்கொள்ளவும் அழகிரியை பா.ஜ.கவில் இணைக்க அந்த கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காகவே அழகிரியும் நீண்ட நாட்களாக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. மிக முக்கியமான பதவியுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஆகிய இரண்டு கோரிக்கைகளை அழகிரி தரப்பு முன்வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

   அந்த கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும் மோடி தமிழகம் வரும் போது அழகிரி அவர் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோடி முன்னிலையில் பா.ஜ.கவில் இணையும் அழகிரி ஸ்டாலின் குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறத் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.