சசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. அமைச்சர் அதிரடி

சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் ஆட்சியிலும், கட்சியிலும், தமிழகத்திலும் எந்த அதிர்வலையும், எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அவரும், அவரது குடும்பமும் இல்லாத நிலையில் இன்றைக்கு கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் கட்சியும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்பதுதான் கட்சியில் உள்ள ஒன்றரைக் கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

அதேநேரம் அவர்கள் ஒரு மாயையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு கானல் நீராகத்தான் இருக்கும். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்போம். அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். அவர் ஒரு கருத்தை கூறியுள்ளார். ஆனால் அது நடக்காத விஷயம். அ.ம.மு.க.வை நாங்கள் ஒரு கட்சியாகவே பார்க்கவில்லை.

இந்த சூழ்நிலையில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சசிகலாவை சந்திக்கக்கூடாது என்று யாருக்கும் நாங்கள் தடை போடவில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல. கட்சி விரோத நடவடிக்கையில் யாராவது இறங்கினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.