40 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க.வின் பக்கம்! ஸ்டாலினுக்கு பீதி கிளப்பும் ராஜேந்திர பாலாஜி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் அசைத்தால் 40 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது பலரை புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது.


அவ்வப்போது அதிரடிக் கருத்துக்களைத் தெரிவித்து  ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை ஈர்த்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ., வாக இருந்துகொண்டு அ.ம.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் 3 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக ஸ்டாலின் கொந்தளிப்பதன் மூலம் அவருக்கு தினகரனுடனான தொடர்பு அம்பலமாவதாகவும் அவர் தெரிவித்தார். 

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலினின் தலைமையை அக்கட்சியில் ஒரு பிரிவினர் ஏற்கவில்லை என்ற ராஜேந்திர பாலாஜி  எடப்பாடி பழனிசாமி கண் அசைத்தால் பணம், பதவி கூட எதிர்பார்க்காமல் 40 தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர தயாராக உள்ளதாக் கூறினார். தற்போதும் தி.மு.க புற வாசல் வழியாகத்தான் ஆட்சிக்கு வர நினைப்பதாகவும் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் தெரிவித்தார்.