பட்டாசு பாதுகாவலன்! எடப்பாடிக்கு ராஜேந்திர பாலாஜி சூட்டிய புதுப் பட்டம்! ஏன் தெரியுமா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை "பட்டாசு பாதுகாவலன்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழ்ந்துள்ள சம்பவமானது சட்டப்பேரவையில் இன்று புகைச்சலை கிளப்பியது.


சென்ற மாதம் 28-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வழியே இன்று சிறு குறு, மற்றும் தொழில்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நிகழ்ந்தது. அப்போது பேசிய திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தமிழகத்தில் பட்டாசு தொழிலாளர்களை காப்பாற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வினவினார்.

இதற்கு தமிழக அரசின் அமைச்சர்களுள் ஒருவரான ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார். அதாவது பட்டாசு தொழிலாளர்களின் சிரமங்களையும், பட்டாசு தொழிலில் தற்போதைய நிலைமையும் பற்றி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்னையும், எதிர்க்கட்சி உறுப்பினரான ராமச்சந்திரனையும் விட "பச்சை தமிழன்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும் என்று முதல்வரை புகழ்ந்தார்.

சமீபத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை முதலமைச்சர் எவ்வாறு கையாண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்காக திறமையான வழக்கறிஞர்களை நியமித்ததோடு மட்டுமில்லாமல், மத்தியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 10 அமைச்சர்களையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். சட்டரீதியாக இருந்த சிரமங்களை சமாளித்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவும் செய்தார்.

ஆகையால் "பட்டாசு பாதுகாவலனான" அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை பட்டாசு தொழிலாளர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பதிலளித்தார். இந்தப் பேச்சானது சட்டப்பேரவையில் இரு கட்சியினரிடையே கடும் புகைச்சலை உண்டாக்கியது.