குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை! ஓபிஎஸ் பற்றி குருமூர்த்தி கூறிய கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி!

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் நேற்றைய தினம் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்பு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், " ஓபிஎஸ் நான் சொல்லித்தான் ஜெயலலிதா அம்மாவின் நினைவிடத்தில் சென்று தியானம் செய்ததாகவும் , தன்னால் தான் அதிமுக கட்சியில் இருந்து வந்த பிளவு சரி செய்யப் பட்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவசியம் என்றும் கூறினார். 

இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இடம் துணை முதல்வர் ஓபிஎஸ்- ஐ பற்றி துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி பேசியதை பற்றிய கருத்து கேட்கப்பட்டது. 

அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பத்திரிக்கையாளர் குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் குருமூர்த்தியை இவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.