குட்கா ஊழல்! விஜயபாஸ்கர் இன்று கைது! விசாரணைக்கு அழைத்தது சி.பி.ஐ!

குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராகும் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையில்லாமல் விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி, சென்னை மாநகர காவல் ஆணையர், காவல் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை அதிகாரிகள் என பலருக்கும் லஞ்சம் கைமாறியது என்பது புகார்.

   குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி மூலம் அமைச்சர் தொடங்கி அதிகாரி வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியது என்பது வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. இது குறித்து வருமான வரித்துறை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயர்நீதிமன்றம் மூலம் தி.மு.க குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது.

   அந்த வகையில் குட்கா குடோன் நடத்திய மாதவ ராவ், அவரது பங்குதாரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் சி.பி.ஐ போலீசார் மாதவராவை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது குட்கா லஞ்சப் பணம் யார் யாருக்கு? யார் மூலமாக சென்றது என்கிற விவரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ அழைத்துள்ளது.

   முதற்கட்டமாக விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்கள் சி.பி.ஐ கிடுக்கு பிடி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல்களை சி.பி.ஐ அதிகாரிகள் பெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜயபாஸ்கரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ அழைத்தது.

   இதனை ஏற்று விஜயபாஸ்கர் இன்று சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரிடம் குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவுடனான தொடர்பு குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தும் வகையிலான ஆவணங்களையும் சி.பி.ஐ தயார் படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஆவணங்களை கொண்டும் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   விசாரணையின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கரை சி.பி.ஐ கைது செய்யவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருப்பவரை கைது செய்ய ஆளுநர் அனுமதி பெற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரிய ஆவணங்களை சமர்பித்தால் கைது செய்ய பச்சைக் கொடி காட்டிவிடுவார் என்று கூறப்படுகிறது.

   குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் ஒருவர் விசாரணைக்கு ஆஜராவது எடப்பாடி அரசுக்கு தர்மசங்கடமான சூழல் ஆகும். இதனை தவிர்க்க விஜயபாஸ்கரை பதவியில் இருந்து விலகுமாறு ஒரு தரப்பு வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஏற்கவே முடியாது என்று விஜயபாஸ்கர் திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

   இதனால் அமைச்சர்கள் குடியிருப்பு இருக்கும் சென்னை க்ரீன்வேஸ் சாலை பகுதி தற்போது முதலே பரபரப்பாக காணப்படுகிறது. நாளைய விசாரணைக்கு பிறகு என்ன  வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தமிழக அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது.