கூட்டுறவு தேர்தல்! அமமுகவை ஜெயிக்க வைத்த செல்லூரார்! கொந்தளிக்கும் அதிமுக!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்ரை ஆலை துணைத் தலைவராக தினகரனின் அ.ம.மு.க கட்சிப் பிரமுகரை அமைச்சர் செல்லூர் ராஜூ வெற்றி பெற வைத்த காரணத்தினால் சக அ.தி.மு.கவினர் கொந்தளித்து போய் உள்ளனர்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குநர் களுக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 17 இயக்குனர் இடங்களில் அதிமுகவினர் 9 இயக்குனர்களையும், தினகரனின் அமமுக 4 இயக்குனர்களையும், கரும்பு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் 4 இயக்குனர்களாகவும் வெற்றி பெற்றனர்.

   தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான இயக்குனர் பதவிகளை அ.தி.மு.க மற்றும் கரும்பு விவசாய சங்கத்தினர் கைப்பற்றி இருந்தனர். இதனால் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத்தலைவராக அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைவராக போட்டியிட்ட அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

   அதே சமயம் துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அமமுகவை சேர்ந்த மேலூர் கதிரேசன் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வானார். அ.தி.மு.க சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாதற்கு காரணம் அமைச்சர் செல்லூர் ராஜூவும், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாகவும் தான் என்கிறார்கள். மதுரை மாவட்ட அ.தி.மு.கவில் இரண்டு விதமான கோஷ்டி பூசல் நிலவுகிறது.

   அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஒரு குழுவும், அமைச்சர் உதயகுமார் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் இருந்து வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பதவிக்கு வந்தால், செல்லூர் ராஜுவும், உதயகுமாரும் ஒன்று சேர்ந்து அவர்களை தோற்கடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே செல்லூர் ராஜூ அமமுக பிரமுகருக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

   இதனால் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏவான மாணிக்கம் கடும் அதிருப்தியில் உள்ளார். கூட்டுறவு சங்க தேர்தலில் உள்ளடி வேலை செய்து அ.தி.மு.கவுக்கே துரோகம் செய்த செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமைக்கு புகாரை தட்டியுள்ளார். அத்துடன் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என்று கூறப்படும், பரமேஸ்வர், சுசீலா, விஜயலெட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

   மேலும் மதுரை மாவட்ட அ.தி.மு.கவினரும் விட அமைச்சர் செல்லூர் ராஜூவின் செயலால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். என்ன பிரச்சனை என்றாலும் நமக்குள் முடித்துக் கொள்ளாமல் தினகரன் தரப்புக்கு பதவியை விட்டுக் கொடுத்தது எப்படி என்று செல்லூர் ராஜூவை கேள்விகளால் திணறடித்து வருகின்றனர். இதனால் மதுரை மாவட்ட அ.தி.மு.க கோஷ்டி மோதல் நீரு பூத்த நெருப்பாகியுள்ளது.