மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்த சவால்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற செல்லூர் ராஜூ ஆங்காங்கே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் மக்களின் ஆதரவு தி.மு.கவுக்கு தான் இருப்பதாகவும், தேர்தலில் தி.மு.க தான் வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

 

   இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்டாலின் எப்போதுமே வேடிக்கையான மனிதர். அவர் எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு முதலமைச்சர் போல் கனவு காண்பவர். எப்படியாவது அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று முயன்று தற்போது தோற்றுப் போய் உட்கார்ந்து இருக்கிறார்.

 

   மக்களின் ஆதரவு எப்போதுமே அ.தி.மு.கவிற்கு தான். அதனால் தான் பெரும்பான்மை ஆதரவுடன் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கொடுத்த எடப்பாடியாரை அனைவரும் வாழ்த்துகிறார்கள்.

 

   ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் எடப்பாடியாரின் நிலைப்பாட்டை மக்கள் போற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள்.

 

   மக்கள் ஆதரவு இருப்பதாக கூறும் ஸ்டாலின் ஏன் கூட்டணிக்காக மாநிலம் மாநிலம் ஆக சுற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் ஆதரவு இருந்தால் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கவேண்டியது தானே? தேர்தலில் தனித்து நிற்க தி.மு.க தயாரா? இவ்வாறு செல்லூர் ராஜூ ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.