அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சதுரங்க விளையாட்டு வீரர் இனியனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்!

கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு பல்வேறு ஆக்கபூர்வமான காரியங்களை செய்துவரும் உள்ளாட்சித் துறை அமைச்சர், பல்வேறு விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை.


அந்த வகையில் ஈரோட்டைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் இனியனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. இவர், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ‘வேர்ல்டு ஓபன்’ சதுரங்கப் போட்டிகளில் வெற்றி அடைந்தவர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இணையதளம் வாயிலாக, ‘வேர்ல்டு ஓபன் – 2020’ சதுரங்கப் போட்டிகள் ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டிகளில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், இஸ்ரேல், கியூபா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 122 வீரர்கள் பங்கேற்றனர். 

இந்த போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இவர், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் சர்வதேச சதுரங்க வீரர்களை தனது அசத்தல் நுணுக்கங்களால் திணறடித்தார்.

ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் சனன் சுஜிரோவ் மற்றும் அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டர் குசினோவ் காதிர் ஆகியோருக்கு எதிரான இறுதி ஆட்டங்கள் சமனில் முடிந்தன. போட்டிகளின் இறுதியில், கிராண்ட் மாஸ்டர் இனியன் மற்றும் சனன் சுஜிரோவ் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளைப் பெற்ற நிலையில், சிறந்த டை- பிரேக்கில் இந்திய வீரர் இனியன் முதல் இடம் பிடித்தார்.

ஈரோட்டை சேர்ந்த இனியன் சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.