பர்சனல் யூசுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 கார்கள்! அமைச்சருக்கு துணைவேந்தர் வைத்த குட்டு!

அண்ணா பல்கலைக்கழக காரை பர்சனல் யூசுக்கு பயன்படுத்தி வந்த அமைச்சருக்கு துணைவேந்தர் சுரப்பா நருக் என ஒரு குட்டு வைத்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் 50-க்கும் மேற்பட்ட துறைகளும், மையங்களும் உள்ளன. இந்த மையங்களில் உள்ள உயர் அதிகாரிகள் அலுவலக பயன்பாட்டிற்காக கார்கள் உள்ளன. இந்த நிலையில் கார்களில் பயன்படுத்திய எரிபொருட்களுக்கான கட்டணம் மற்றும் வாடகை கார்கள் அமர்த்தியதற்கான கட்டணம் போன்ற செலவுக்கான தொகையை அதிகாரிகள் கோரியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்த துணை வேந்தர் சுரப்பா மிகப்பெரிய மோசடியை கண்டுபிடித்துள்ளார்.

  

   அதாவது துறை அதிகாரிகளுக்கு கார் இருக்கும் போது ஏன் தனியாக வாடகை கார்கள் எடுக்க வேண்டும் என்று சுரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு அதிகாரிகள் மழுப்பலான பதிலையே அளித்து வந்துள்ளனர். இதனால் வாடகை கார்கள் மற்றும் எரிபொருட்களுக்கான கட்டணத்தை சுரப்பா கொடுக்க முடியாது என்று நிறுத்தி வைத்துள்ளார். அப்போது தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் கார்களில் ஐந்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும், உயர்கல்வித்துறை அதிகாரிகளும் தங்கள் பர்சனல் யூசுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

 

   ஐந்து கார்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும், அவரது துறைச் செயலரும் மறைமுகமா பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கான எரிபொருள் கட்டணத்தை நீண்ட நாட்களாக அண்ணா பல்கலைக்கழகம் செலுத்தி வந்துள்ளது. அமைச்சரும், செயலரும் கார்களைப் பயன்படுத்துவதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை அதிகாரிகள் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

 

    இதற்கான செலவினத்தை பல்கலைக்கழகத்தின் கணக்கில் காண்பித்துள்ளனர்.  அமைச்சரும், செயலரும் கார்களை தொடர்ந்து பயன்படுத்துவதும், அதற்கான எரிபொருள் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து செலுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அமைச்சர் அன்பழகன் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் பயன்படுத்திய கார்களுக்கான எரிபொருள் கட்டணத்தை கொடுக்க முடியாது என துணைவேந்தர் சுரப்பா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

 

   மேலும் இனி உயர்கல்வித்துறை அமைச்சர் தனது சொந்த பயன்பாட்டுக்கு அண்ணா பல்கலைக்கழக காரை பயன்படுத்த கொடுக்க கூடாது என்றும் ஆணையிட்டுள்ளார். இதனால் அந்த கார்களுக்கு உடனடியாக, எரிபொருள் நிரப்புவதை  நிறுத்தும்படி  அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுரப்பா பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக அமைச்சருக்கே தலையில் நறுக் என கொட்டு வைத்திருப்பது தான் ஹைலைட்.