திமுக கூட்டணி கட்சிகள் சில அதிமுகவுடன் கூட்டணி பேசுகின்றன! ஜெயக்குமார் தடாலடி!

அதிமுகவுடன் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தேமுதிகசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைப்பெற்று வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைப்பெற்று வருவதாகவும், ஆனால் இந்த கூட்டணி அமையக்கூடாது என பலர் ஆர்வமாக செயல்படுவதாக கூறினார்.

மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதை தற்போது சொல்ல முடியாது என கூறினார்.

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து அன்புமணி தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியை சீர்குலைக்க எத்தகைய சிண்டு முடித்தாலும் ஒரு மித்த கருத்தோடு தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என தெரிவித்தார்.

மேலும் திமுக காங் கூட்டணி தமிழினத்துக்கே பேராபத்து விளைவிக்கும் கூட்டணி என்றும் அதை எந்த நிலையிலும் தலை தூக்க விட மாட்டோம் என கூறினார்.