நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி! தமிழகத்துக்கு எப்போது கிடைக்கும் 12 ஆயிரம் கோடி ரூபாய்..?

ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற நேரத்தில், தமிழகத்துக்கு தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து அமைசர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.


இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்திற்கு மத்திய அரசு 2018ஆம் நிதி ஆண்டு முதல் 2020 வரை வழங்க வேண்டிய இழப்பீடு 12,258 கோடியே 94 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். 2017- 18 நிதி ஆண்டில் வழங்க வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவை தொகையான 4,037 கோடியும் வழங்க வேண்டும்’’ என்று கேட்டதாகத் தெரிவித்தார்.

 மேலும், “மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு ஜிஎஸ்டி மேல்வரி தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு கடனாகவோ, முன்பணமாகவோ வழங்கிட வேண்டும். இந்தக் கடனானது எதிர்வரவிருக்கும் மேல்வரி வரவினத்தில் ஈடு செய்து கொள்ளலாம். மேற்படியான பரிந்துரையினை ஜிஎஸ்டி (GST) மன்றமானது மத்திய அரசுக்கு அளித்திட வேண்டும்’’ என்றும் கேட்டுக்கொண்டார்.