சென்னையின் நுழைவாயிலாகக் கருதப்படும் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பெஞ்சமினும், திமுக சார்பில் காரப்பாக்கம் கணபதியும் களமிறங்கியுள்ளனர். காசை அள்ளியிறைப்பது மட்டுமே கணபதிக்கு பிளஸ் பாயிண்ட். அதேவேளை அமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்தது பெஞ்சமினுக்குக் கை கொடுக்கிறது.
சென்னையில் கொடி பறக்குது... வெற்றிக்கோட்டை நெருங்கிய அமைச்சர் பெஞ்சமின்

சென்னை துணை மேயர், அமைச்சர் போன்ற பொறுப்புக்களில் இருந்தாலும் பந்தா இல்லாமல் பழகுவார் என்கிற நல்ல பெயர் தொகுதி முழுக்க எதிரொலிக்கிறது. கரன்சியை மட்டும் நம்பி களமிறங்கியுள்ள கணபதிக்கு கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை.
மார்க்சிஸ்டுகள் விரும்பிக் கேட்ட இந்த தொகுதியை அவர்களுக்கு தராததால் தோழர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பக்கத்து தொகுதிகளுக்கு பறந்துவிட்டனர். இதனால் தன்னந்தனியே களமாடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கணபதி.
அதேநேரம் தொகுதியில் மிகக் கணிசமான அளவு வன்னியர்கள் உள்ள நிலையில் பெஞ்சமினுக்காக பாமகவினர் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர். இது தவிர சிறுபான்மை சமூக வாக்குகளும் பெஞ்சமினுக்கு கூடுதல் பலமாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கணபதி முந்திச் செல்வதாக ஒரு தோற்றம் இருந்தாலும், தனது அயராத தேர்தல் பணிகளின் மூலம் பெஞ்சமின் வெற்றிக்கோட்டை நெருங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.